மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Printer-friendly versionPrinter-friendly versionSend by emailSend by email

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெய்வச்செயல்புர கிராம விவசாயிகளின் நிலங்களை திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. செல்வம் பினாமிகள் பெயரில் மோசடியான ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்றதை எதிர்த்து, தங்கள் நிலங்களை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் அக்கிராம விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசும் இதில் தலையிட்டுள்ளது. இந்நிலையில் விவசாயகளின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை செல்வத்தின் அடியாட்கள் சேதப்படுத்தியதால் அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்துள்ளனர். எனவே உண்மை நிலைமையை விளக்கி மாவட்டச் செயலாளர் கே. கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்களை சந்தித்து கடிதம் கொடுத்த போது, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிபிஎம் கட்சி முன்னணி ஊழியர்களான மாரியப்பன், வரதவிநயாகமூர்த்தி அவர்களை கடுமையாகத் தாக்கியதோடு அல்லாமல், இவர்களை மருத்துவமனைக்கு அனுமதிப்பதற்கு அழைத்துச் சென்ற கட்சியின் நகரச் செயலாளர் அர்ச்சுனன் அவர்களையும் தாக்கியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாரியப்பன், அர்ச்சுனன், வரதவிநாயக மூர்த்தி ஆகிய மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில் நேற்று இரவு (6-1-2012) தூத்துக்குடி சிபிஎம் மாவட்டச் செயலாளர் கனகராஜ் அவர்கள் வீட்டின் மீது சில சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளனர். கனகராஜ் வீட்டில் இல்லாத நிலையில் அவர் மனைவி விஜயா இத்தாக்குதலில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையில் இதுவரை எவரையும் காவல்துறை கைது செய்யாதது வியப்பளிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சமூக விரோதிகளின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறது. இந்த சமூக விரோதச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவதுடன் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை தாமதமின்றி எடுக்க வேண்டுமெனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கனகராஜ் மற்றும் கட்சியின் முன்னணி ஊழியர்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இதனை வலியுறுத்தி 11.1.2012 புதன் கிழமையன்று தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன பேரணி - பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார். அதேநாளில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை சக்தியாக நடத்திடுமாறு மாவட்டக்குழுக்களையும், கட்சி அணிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.