தமிழக - கேரள மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்

Printer-friendly versionPrinter-friendly versionSend by emailSend by email

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (15-12-2011) முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து தமிழக உரிமைகளை வற்புறுத்தும் வகையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இந்நிலையில் கம்பம் - குமுளியைத் தாண்டி கேரள எல்லைப் பகுதிகளில் வேலைக்காகச் சென்றுள்ள தமிழக தொழிலாளர்கள் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தலுகளுக்கு ஆளாக்கப்பட்டு குடும்பத்துடன் தமிழகம் திரும்பியுள்ளதாக வந்துள்ள செய்தி கவலையளிப்பதாக உள்ளது. அதேபோல தமிழகத்தில் சில பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் சில தொழில் நிறுவனங்கள் மீது நடைபெறும் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் வருத்தமளிப்பதாக உள்ளது. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிலைமை சீரடைய உதவாது, மேலும் சிக்கலாக்கவே உதவும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
 

கேரளாவில் வேலை நிமித்தம் காரணமாக பணிபுரியும் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டுமென கேரள மாநில அரசை வற்புறுத்துவதுடன், தமிழகத்திலும் வன்முறைச் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்திட வேண்டுமென தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
 

மத்திய அரசு இவ்விரு மாநிலத்தில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்ச்சிப் போக்குகளை வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு வேடிக்கைப்பார்க்காமல் உடனடியாக தலையிட்டு இவ்விரு மாநிலத்திலும் சுமூக நிலையை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.