சத்துணவு பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிடுக!

Printer-friendly versionPrinter-friendly versionSend by emailSend by email

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களில் காலியாக உள்ள சுமார் 28,500 பணியிடங்களை நிரப்பப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது கண்டனத்திற்குரியதாகும்.

அரசுத்துறைகளில் காலியான பணியிடங்களை நிரப்பிடும்போது 1995-ஆம் ஆண்டு ஊனமுற்றோர் சமவாய்ப்புச் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இடங்களை ஒதுக்கி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படமாட்டாது என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவிப்பதாக தகவல் உள்ளன.

கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி உலக ஊனமுற்றோர் தினத்தையொட்டி முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் அரசுத்துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி அனைத்துத்துறைகளிலும் 3 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்துவதை கண்காணிக்க  தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவித்தார். இதற்குப் பின்பும் சத்துணவு பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாதது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக அரசு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களில் காலியாக உள்ள 28,500 பணியிடங்களை நிரப்பிடும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித பணியிடங்களை ஒதுக்கீடு செய்திட தமிழக முதல்வர் அவர்கள் உத்திரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.