மக்களவையில் பி.ஆர். நடராஜன் கோரிக்கை!

Printer-friendly versionPrinter-friendly versionSend by emailSend by email

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம்  மாநிலங்களிலும் மாஹி யூனியன் பிரதேசத்திலும் இயங்கி வருகின்ற என்டிசி (நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்பரேஷன்) ஆலைகளில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களை வழங்கிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:

என்டிசி  ஆலையின் தென்னகப் பகுதியான தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் மற்றும் மாஹி ஆகிய இடங்களில் பணியாற்றி வரும் அலுவலக ஊழியர்கள் தொழிற்சாலை அகவிலைப்படி சம்பந்தமாக திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் மூலம் விளைந்த பயன்பாடுகள் தொடர்பாக 2004 ஏப்ரல் 13 அன்று தேதியிட்ட மத்தியஅரசின் அரசாணையினைத் தங்களுக்கும் அமல்படுத்தும்படிக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியபின் கடைசியாக தற்சமயம் 2011 நவம்பர் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர். மேற்படி நான்கு மாநிலங்களிலும் உள்ள 15 டெக்ஸ்டைல் ஆலைகளிலும் சுமார் ஐயாயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், மூவாயிரம் தற்காலிகத் தொழிலாளர்களும் 500 நாட்கூலித் தொழிலாளர்களும் பணியாற்றுகிறார்கள்.

இவர்களில் அலுவலக ஊழியர்களாக உள்ள சுமார் 265 பேர் தங்களுக்கு தொழிற்சாலை அகவிலைப்படி அடிப்படையில் 2007 ஜனவரி 1 முதல் அளித்திடுமாறும் தங்கள் ஊதியத்தை 2004 ஏப்ரல் 1 தேதியிலிருந்து மாற்றி அமைத்திட வேண்டும் என்றும் கோரி பல்வேறு இயக்கங்களை நடத்தியபின் கடைசியாக இப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

என்டிசி, தென்னக பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டு வாடகைப்படியாக ஊதியத்தில் 20 விழுக்காடு (அதாவது சுமார் 4000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை) வாங்கும் அதே சமயத்தில், அலுவலக ஊழியர்களோ வெறும் 167 ரூபாய்தான் வீட்டு வாடகைப்படியாக வாங்குகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு 2004 ஏப்ரல் 13 அன்று ஓர் அரசாணை வெளியிட்டது. அதில் தீர்ப்பில் கண்டுள்ள அம்சங்களை அமல்படுத்திடுமாறு பணித்திருந்தது. ஆயினும் அவை இதுநாள்வரை அமல்படுத்தப்படவில்லை. எனவே மத்திய அரசாங்கம் இதில் தலையிட்டு, என்டிசி அலுவலக ஊழியர்கள் பிரச்சனைகளை மிக விரைவாகத் தீர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் கோரியுள்ளார்.