ஆளுங்கட்சி​யினரின் தேர்தல் விதிமுறை மீ​றல்

Printer-friendly versionPrinter-friendly versionSend by emailSend by email

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருத்தங்கல் நகராட்சியில் ஆளும் கட்சியினரின் தேர்தல் விதிமுறை மீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தவும், வாக்கு எண்ணிக்கையின் போது அராஜகத்தை கட்டவிழ்த்துவிட முயற்சிப்பதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், மாநிலத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு இன்று (16.10.2011) அனுப்பியுள்ள கடிதம் பின்வருமாறு‍:-

 


16.10.2011


பெறுநர்
 மாநில தேர்தல் ஆணையர்,
 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்,
 208/2, ஜவஹர்லால் நேரு சாலை,
 அரும்பாக்கம், சென்னை 600 106.
 

அன்புடையீர், வணக்கம்.
 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலுக்கு உட்பட்ட கிராமத்தில் அதிமுகவினர் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யும் போது “நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும், வாக்கு எண்ணிக்கையின் போது எங்கள் கட்சியின் வேட்பாளர் தான் ஒன்றிய சேர்மனாக அறிவிக்கப்படுவார்” என வெளிப்படையாக பகிரங்கமாக பேசி வருகின்றனர்.
 

மேலும் ஆளுங்கட்சியினர் திருத்தங்கல் நகராட்சி 20வது வார்டில் மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கப்போவதாக கூறி அப்பகுதியில் ரேசன் கார்டு ஜெராக்° நகலை கேட்டு சேகரித்து வருகின்றனர். அதே நகராட்சியில் 4வது வார்டில் ஒரு வீட்டில் சேலைகள் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வருவதையும் அங்குள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தரப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
 

எனவே, ஆளும் கட்சியினரின் இந்த தேர்தல் விதிமுறை மீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தவும், வாக்கு எண்ணிக்கையின் போது அராஜகத்தை கட்டவிழ்த்துவிட ஆளும் கட்சியினர் முயற்சிப்பதை தடுத்து நிறுத்திட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
 

நன்றி
 

தங்களன்புள்ள
/ ஒப்பம்
(ஜி.ராமகிருஷ்ணன்)
செயலாளர்