ஆசிரியர் பணி நியமனங்களை வேலைவாய்ப்​பக அலுவலகம் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையி​ல் நியமனம் செய்ய மார்க்சிஸ்​ட் கட்சி வலியுறுத்த​ல்

Printer-friendly versionPrinter-friendly versionSend by emailSend by email

25 - 1 - 2012 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (25.1.2012) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், உ. வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு :  

அனைத்து ஆசிரியர் நியமனங்களையும், பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!   கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசு தரப்பில் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பல்வேறு நிலைகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வெளியிடப்பட்டுள்ள அரசினுடைய அறிவிப்பில், நியமன முறைகள் பற்றி எந்த தெளிவும், விவரமும் இல்லை. எனவே, வெளிப்படையான முறையில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு அரசு கொண்டு வந்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வினை கைவிட வேண்டும். பணியிட மாறுதல், ஓய்வு, பதவி உயர்வு, பள்ளித்தரம் உயர்வு காரணங்களால் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள மாதிரிப்பள்ளிகளில் உள்ள காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மேலும் நிரந்தர பணியிடங்களில் ஒவ்வொரு மணிக்குமான ஊதியம் (Hourly Basis Wages) என்ற முறையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் அரசின் முயற்சி கைவிடப்பட வேண்டும்.

ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித்தகுதி பெற்று, வேலை வாய்ப்பற்று இருக்கக் கூடிய லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தங்களுக்கு காலமுறை ஊதிய அடிப்படையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இச்சூழலில் பல்வேறு நிலைகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது வெளிப்படையான முறையிலும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. (ஜி. ராமகிருஷ்ணன்) மாநிலச் செயலாளர்